யாழில் மனைவியின் தங்கைக்கு ஆசைப்பட்டு 3 கொலை செய்த தனஞ்சயனின் வழக்கு மேல்நீதிமன்றில்

அச்சுவேலி முக்கொலை வழக்கின் தொடர் விசாரணையை அடுத்த வாரம் ஆரம்பிக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில்  வசித்து வந்த தனஞ்சயன் என்ப வர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அவரது மாமியாரான நற்குணானந்தன் அருள்நாயகி, மைத்துனியான யசோதரன் மதுசா, மைத்துனனான நற்கு ணானந்தன் சுபாஸ்கரன் ஆகியோரை கொலை செய்ததாகவும் மனைவியான தன ஞ்சயன் தர்மிகா மற்றும் மைத்துனியின் கணவரான தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்ய எத்தனித்தார் என்ற 5 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் 3 கொலைகள்,  2 கொலை முயற்சிகளை  மேற்கொண்டதாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றில்  குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை விரைவில் நடத்துமாறு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இவ்வழக்கு  நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்ததுடன் எதிரி தரப்பில் சட்டத்தரணிகள் திருக்குமரன் மற்றும் கே. ரஞ்ஜித்குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

நேற்றைய தினம் மன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் எதிரிக்கு வாசித்துக்காட்டப்பட்ட போது  5 குற்றச்சாட்டுக்களுக்கும் எதிரி தான் சுத்தவாளி என மன்றுரை செய்து யூரல் சபை இல்லாத விசாரணையை தெரிவு செய்வதாக தெரிவித்தார்.

அந்த வகையில் குறித்த  வழக்கை எதிர்வரும் 27,28,29,30 ஆகிய நாட்களில் தொடர் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டதுடன்  மேற்குறித்த வழக்கில் உள்ள 14 சாட்சிகளில் தேவையான சாட்சிகளை ஆஜ ராகுமாறும் அழைப்பாணை விடுத்திருந்தார்.

01 தொடக்கம் 6 வரையான சாட்சிகளான யோகரட்ணம் துசாந்தன், கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம், பொ.கௌரிகாந்தன், தனஞ்சயன் தர்மிகா, தங்கவேல் யசோதரன், க.செல்வநாயகம் முத்து  ஆகியோரை எதிர் வரும் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும், 7 தொடக்கம் 9 வரையான சாட்சிகளான சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சொரூபன், உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச,பொலிஸ் சாஜன்ட் ராஜபக்ஷ ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறும் ஏனைய சாட்சிகளை அடுத்துவரும் நாட்களில் ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

எதிரி தரப்பு சட்டத்தரணியால், குறித்த எதிரி தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வருவதால் பிணையில் விடுவிக்குமாறு மன்றில்  விண்ணப்பம் செய்யப்பட்டது.

எனினும் தொடர் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதால் குறித்த பிணை மனுவை நிராகரித்து  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை எதிரியை விளக்கமறியில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.